என்னது தங்க சுரங்கமா? சென்னையில் நூதன பண மோசடி - லட்ச கணக்கில் ஏமாறியவர்கள் போலீசில் புகார்!
தங்க சுரங்கம் இருப்பதாக கூறி நபர் ஒருவர் லட்ச கணக்கில் பண மோசடி செய்துள்ளார்.
பண மோசடி
சென்னையில் சிவசக்தி என்ற நபர் பிராவிடான்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இதற்காக விருகம்பாக்கத்தில் அலுவலகம் ஒன்றையும் வைத்துள்ளார். தங்கள் நிறுவனத்தில் மாதம் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் அதை ரூ. 20000ஆக தருவோம் என்று சொல்லியிருக்கிறார் சிவசக்தி.
இதை நம்பிய பலரும் முதல் கட்டமாக ரூ.1 லட்சத்தை முதலீடு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒருமுறை ரூ.10000 வீதம் மாதம் ரூ.20000 கொடுத்துள்ளார். அதற்கு பிறகு முதலீடு செய்தவர்களை அழைத்து மீட்டிங் ஒன்றை வைத்துள்ளார். அதில் 'இன்னும் கூடுதல் முதலீடு செய்தால், கூடுதல் பணம் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்.
முதல் இரண்டு மாதம் அவர் சரியாக பணம் கொடுத்ததால் இதை நம்பிய பலரும் 3 -5 லட்சம் ரூபாய் வரை கூடுதல் முதலீடு செய்துள்ளனர். இதனையடுத்து முதலீடு செய்தவர்களிடம் 'என்னிடம் கானாவில் தங்கச் சுரங்கம் இருக்கிறது. அதில் வரும் தங்கத்தை விற்பனை செய்து அதில் வரும் பணத்தை டிரேடிங் செய்கிறேன். அதனால் நிறைய வருமானம் வருகிறது.
அதைத்தான் என்னிடம் முதலீடு செய்பவர்களிடம் நாங்கள் கூடுதல் பணம் கொடுக்கிறேன் என்று கூறி சிவசக்தி பணம் வாங்கி உள்ளார். பணம் வாங்கிய 2 மாதங்களுக்கு பின் யாருக்கும் பணம் கொடுக்காமல் பணத்தை எடுத்துக் கொண்டு சிவசக்தி துபாய்க்கு தப்பிச் சென்றுள்ளார்.
புகார்
இந்நிலையில் பணம் கொடுத்து ஏமாறிய 60க்கும் பெறப்பட்டவர்கள் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அலுவலகத்தில் தங்களிடம் பல லட்சங்களை சிவசக்தி என்ற நபர் ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்துள்ளனர். இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சிவசக்திக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்