பணம் வேண்டாம்.. சோளம் கொடுத்து டொயோட்டா கார்களை வாங்கலாம்.. விவசாயிகளுக்கு செம ஆஃபர் !!
உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் ஒவ்வொருத்தருக்கும் சொந்தமாக கார், வைக் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். பணம் இதற்கு பெரிய தடையாக இருக்கும். ஆனால் பிரேசில் நாட்டில் பணம் இல்லாமல் கார் வாங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். டொயோட்டா தனது காரை வாங்கும் வாடிக்கையாளரிடம் இருந்து பணத்திற்கு மாற்றாக சோளம் அல்லது சோயாபீன்ஸை வாங்க தொடங்கியிருக்கின்றது.

தனது வாகனங்களுக்கான பணமாக, பண்ட மாற்று முறையில் சோளம் அல்லது சோயாபீன்ஸை வாங்க முடிவு செய்திருக்கும் முதல் ஆட்டோமொபைல் நிறுவனம் என்ற பெருமையை ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டொயோட்டா நிறுவனம். பிரேசிலில் வேளாண் துறையில் ஈடுப்பட்டு வருவோரை கவர்வதற்காக டொயோட்டா இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பிரேசிலில் டொயோட்டாவின் மொத்த விற்பனையில் கிட்டத்தட்ட 16 சதவீதம் அதன் வேளாண் வணிக துறை தான் பங்களிக்கிறது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய பண்டமாற்று முறை இந்த சதவீதத்தை மேலும் அதிகரிக்க உதவும் என டொயோட்டா நம்பிக்கை கொண்டுள்ளது. வேளாண் துறையை சேர்ந்த வாடிக்கையாளர்களை தவிர்த்து பிரேசிலில் உள்ள மற்ற வாடிக்கையாளர்களுக்கு மேற்கூறப்பட்ட டொயோட்டா கார்கள் வழக்கம்போல் பணத்திற்காகவே விற்பனை செய்யப்பட உள்ளன.

காரின் மதிப்பிற்கு ஏற்ப சோளம் அல்லது சோயாபீன்ஸ் பெற்று கொள்ளப்பட்ட பிறகே கார் அதன் உரிமையாளருக்கு டெலிவிரி செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்தில் டொயோட்டா ஹில்லுக்ஸ் பிக்அப் ட்ரக், கரோல்லா க்ராஸ் எஸ்யூவி அல்லது எஸ்.டபிள்யூ4 எஸ்வி காரை வாடிக்கையாளர் வாங்கலாம்.
அதாவது வாடிக்கையாளர் கிராமம் அல்லது சிறிய நகர பகுதியில் வசித்து கொண்டு வேளாண் துறையில் ஈடுப்பட்டு வருகிறாரா என்பது டொயோட்டா டீலர்களால் உறுதி செய்து கொள்ளப்படும். தற்போதைக்கு இந்த திட்டம் பிரேசிலின் சில மாநிலங்களில் மட்டுமே அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டு வாடிக்கையாளர்களிடம் பெறப்பட உள்ள சோளம் மற்றும் சோயாபீன்ஸ் எங்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன என்பதும் தெரியவில்லை. பிரேசிலில் இருந்து ஏற்றுமதி செய்து மற்ற நாடுகளில் டொயோட்டா
விற்பனை செய்யலாம் அல்லது இவற்றின் மூலமாக எரிவாயுவை தயாரிக்கும் திட்டம் ஏதாவது இந்த நிறுவனத்திடம் இருக்கலாம் என்று தொழில் துறையினர் கூறுகின்றனர்.