நாணயங்களைக் கொட்டி நூதன முறையில் 56 ஆயிரத்தைக் கொள்ளையடித்த கொள்ளையர்கள்
கண்டிகையில், வங்கி வாசலில் நாணயங்களை கொட்டி, காவலாளியை திசை திருப்பி, அவரது துணிப்பையில் இருந்த, 56 ஆயிரம் ரூபாயை, மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பினர்.
கேளம்பாக்கம் அடுத்த, வேங்கடமங்கலம், சுபாஷ் சந்திர போஸ் நகர், இரண்டாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சங்கர், 41; தனியார் பள்ளி காவலாளி. இவருக்கு, மனைவி சின்ன பொண்ணு, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.நேற்று முன்தினம், சங்கர், தன் உறவினர் வங்கிக் கணக்கில், 56 ஆயிரம் ரூபாய் செலுத்துவதற்காக, கண்டிகையில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்றார்.
சில காரணங்களால், வங்கி கணக்கில் பணம் செலுத்த முடியவில்லை. இதனால், வெளியே வந்த அவர், துணிப்பையில் வைத்திருந்த, 56 ஆயிரம் ரூபாயை,தன் இரு சக்கர வாகனத்தில் வைத்து, மொபைல் போனில், உறவினரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, இவரை நோட்டமிட்ட மர்ம நபர்கள், சங்கர் அருகே, நாணயங்களை கொட்டிவிட்டு, 'உங்கள் நாணயங்களா இது' என, திசை திருப்பினர். அவர் நாணயங்களை எடுத்தபோது, மர்ம நபர்கள், பணப்பையை கொள்ளையடித்து, இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.
பணப்பை திருடுபோனதை அடுத்து, சங்கர், தாழம்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார், வங்கியின், 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தனர். முதற்கட்டமாக, வெங்கம் பாக்கத்தைச் சேர்ந்த இரு வாலிபரை பிடித்து விசாரிக்கின்றனர்.