பிறந்த பச்சிளம் குழந்தையை மருத்துவமனையில் இருந்து தூக்கி வீசிய தாய் - ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மும்பையில் மருத்துவமனையின் ஜன்னல் வழியாக பெண் சிசுவை தூக்கி எறிந்த தாய்க்கு ஆயுள் தண்டனை வழங்கியது மும்பை உயர்நீதிமன்றம்.
கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம், மும்பை கெம் மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவில் தீபிகா பார்மர் என்ற பெண் தனது ஒன்றரை மாத இரட்டைக் குழுந்தைகளை சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார்.
இரண்டு குழந்தைகளும் குறைப்பிரசவத்தில் பிறந்ததால் மிகவும் எடை குறைவாக இருந்தன. இவற்றில் ஒன்று ஆண் குழந்தை, ஒன்று பெண் குழந்தை.
இந்நிலையில் அக்டோபர் 26-ந் தேதி, காலை 4.30 மணியளவில் தீபிகா திடீரென தனது பெண் குழந்தையை காணவில்லை என கூச்சலிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
திகைத்துப் போன மருத்துவமனை நிர்வாகம் சி.சி.டி.வி கேமரா பதிவை பார்த்தப்போது தீபிகா வார்டில் இருந்து தனது பெண் குழந்தையை டவலில் சுற்றி கழிப்பறைக்குள் எடுத்துசென்று ஜன்னல் வழியாக வெளியே தூக்கி எறிந்தது தெரியவந்தது.
மேலிருந்து கீழே தூக்கியெறியப்பட்ட அந்த பச்சிளம் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
இதை தொடர்ந்து தீபிகா பார்மர் மீது பொய்வாடா காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 317 மற்றும் 302 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபிகா பார்மருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தற்போது மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.