பிஞ்சு குழந்தையை தாக்கிய கொடூர தாய் நீதிமன்றத்தில் ஆஜர் - தீர்ப்பு என்ன?
விழுப்புரம் அருகே 2 வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள மணலப்பாடி கிராமத்தைச் சேர்ந்த வடிவழகன், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த துளசி என்ற பெண்ணை கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவ்வாறு நிகழும்போதெல்லாம், துளசி தனது இளைய மகனை கொடூரமாக தாக்கி அதை வீடியோவாக எடுத்து வைத்து கொள்வார்.
அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் குழந்தையை அடித்ததில் குழந்தைக்கு வாயில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. இந்த குழந்தையை தாயிடம் இருந்து மீட்ட அவரது உறவினர்கள் குழந்தையை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மருத்துவர்கள் கேட்டபோது குழந்தை தவறி விழுந்து அடிப்பட்டதாக கூறி உறவினர்கள் சமாளித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஆத்திரத்தில் வடிவழகன் மனைவி துளசியை அவரது தாயார் வீட்டிற்கே அனுப்பி வைத்துள்ளார்.
தற்போது துளசி தனது குழந்தையை தாக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. இதனால் சமூக ஆர்வலர்கள் பலரும் துளசியை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையையடுத்து, துளசியை கைது செய்த போலீசார் அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் தற்போது துளசி, செஞ்சி நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.