"என் நாட்டுக்காக என்னால் முடிந்ததைச் செய்வேன்" - சச்சினுக்கு சிராஜ் ட்விட்டரில் நன்றி
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் முகமது சிராஜை பாராட்டி பேசியதற்கு ட்விட்டரில் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் சிராஜ்.
சச்சின் டெண்டுல்கர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,
“கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் மெல்போர்ன் டெஸ்ட்டில் ஆடிய சிராஜ் தனது அறிமுக போட்டியில் விளையாடியது போன்றே விளையாடவில்லை.
டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்கு முதிர்ச்சி அடைந்த ஒரு வீரரின் உடல் மொழி எவ்வாறு இருக்குமோ அதேபோன்று அவர் நேர்த்தியாக செயல்பட்டார்.
அதுமட்டுமின்றி நான் ஒவ்வொரு முறை அவரின் பந்துவீச்சை பார்க்கும் போதும் புதுப்புது விஷயங்களை அவர் அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறார்.
சிராஜின் பார்ம் அசத்தலாக தொடர்ந்து வருகிறது. அவர் கால்களில் ஸ்ப்ரிங் வைத்துள்ளார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் ஓடிவருவதை பார்க்கும்போது அவ்வாறு தான் இருக்கிறது. அந்த அளவிற்கு அவர் முழு எனர்ஜியுடன் பந்து வீசுகிறார்.
ஒரு வேகப்பந்து வீச்சாளர் இப்படி புத்துணர்வோடு தொடர்ச்சியாக பந்து வீசுவது பார்ப்பதற்கு நன்றாக உள்ளது.
நான் அவரைப் பார்க்கும்போது முதல் ஓவர் வீசுகிறாரா அல்லது கடைசி ஓவர் வீசுகிறாரா என்று தெரியாத அளவிற்கு எப்போதும் ஒரே மாதிரி நல்ல வேகத்துடன் நல்ல புத்துணர்ச்சியுடனும் பந்து வீசி வருகிறார்.
நிச்சயம் அவர் இன்னும் பல விஷயங்களை விரைவாக கற்றுக் கொண்டு இந்திய அணியின் முன்னணி வீரராக வலம் வருவார்” என்றார்.
சச்சினின் இந்த பாராட்டுக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ள முகமது சிராஜ்,
“நன்றி சச்சின் சார்... உங்களிடமிருந்து பாராட்டு வருவது எனக்கு மிகப்பெரிய ஊக்கம்.. நான் எப்போதும் என் நாட்டுக்காக என்னால் முடிந்ததைச் செய்வேன். நலமுடன் இருங்கள் சார்” என பதிவிட்டுள்ளார்.
Thank you @sachin_rt sir for this . It is a huge motivation for me coming from you .. I will always do my best for my country .stay well sir https://t.co/3qJrCBkwxm
— Mohammed Siraj (@mdsirajofficial) December 22, 2021