பாகிஸ்தானுடனான தோல்வி: மத ரீதியாக தாக்கப்படும் முகம்மது ஷமி - ரசிகர்களின் முட்டாள்தனமான செயலால் அதிருப்தி
டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு இந்திய வீரர் முகமது ஷமியை மத ரீதியாக ரசிகர்கள் விமர்சித்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்று போட்டியில் பாகிஸ்தானிடம் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதலில் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. பின்னர் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 17.5 ஓவரிலேயே அதனை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தான் அணியிடம் இந்தியா தோல்வியை தழுவியதால் ரசிகர்கள் கடும் ஏமாற்றத்திற்குள்ளாயினர். சிலர் வீரர்கள் மீது மரியாதையான முறையில் விமர்சனங்களை வைக்க விளையாட்டிலும் அரசியலை புகுத்த பார்க்கும் சிலர் இதுதான் நேரம் என பாகிஸ்தான் மீதும், தங்களுக்கு பிடிக்காத வீரர்கள் மீதும் வன்மத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்திய அணியின் தோல்விக்கு விராட் கோலி தான் காரணம் என ரசிகர்கள் விமர்சிக்க, அவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில் முகமது ஷமியை மிக மிக மோசமாக விமர்சித்து வருகின்றனர்.நேற்று ஷமி வீசிய 18 வது ஓவரில் மட்டும் 17 ரன்கள் சென்றது. இதனால் ஆந்த ஓவரிலேயே பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்திய அணியின் தோல்வி அதற்கு முன்பே உறுதியாகிவிட்டது.
எனினும் முகமது ஷமி இஸ்லாமியர் என்பதால் அதன் காரணமாக தான் பாகிஸ்தானுக்கு சுலபமாக பந்துவீசிவிட்டார் என தகாத வார்த்தைகளில் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ஷமிக்கு ஆதரவாக இந்திய அணி ஏன் நிற்கவி்ல்லை என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். அதேசமயம் முன்னாள், இந்நாள் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் ஷமிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்புகள்..! சிறிலங்கா எயார்லைன்ஸின் அவசர அறிவிப்பு IBC Tamil
