327 பந்துகளில் முச்சதம் விளாசி மிரள வைத்த பாகிஸ்தான் வீரர் - குவியும் பாராட்டு
327 பந்துகளில் முச்சதம் விளாசி பாகிஸ்தான் வீரர் வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் குவைதே ஆசாம் கோப்பைக்கான முதல் தர கிரிக்கெட் தொடரில் 19 வயதான முகமது ஹுரைரா என்ற வீரர் முச்சதம் விளாசினார் . பாகிஸ்தான் வீரர் ஷோயப் மாலிக்கின் நெருங்கிய உறவினரான இவர் 327 பந்துகளில் இதனை எட்டியுள்ளார்.
நாதர்ன் அணிக்கு ஆடும் ஹுரைரா 3ம் நாள் தேநீர் இடைவேளையின் போது இறங்கி அடித்து நொறுக்கி இந்த இன்னிங்சில் 311 ரன்களை 340 பந்துகளில் எடுத்தார். இந்த சீசனில் அவர் அடிக்கும் 3வது சதம் இதுவாகும்.
தனது அறிமுக முதல் தர சீசனில் ஆடும் முகமது ஹுரைரா தனது 19 வயது 239 நாட்களில் முச்சதம் விளாசி சாதனை புரிந்தார். மொத்தமாக ஹுரைரா முச்சதம் அடித்த 8வது இளம் வீரர் ஆவார். அதேபோல் மொத்தம் பாகிஸ்தான் மண்ணில் 23 முச்சதங்கள் அடிக்கப்பட்டுள்ளது. ஹுரைரா 300 அடிக்கும் 22 வது நபராக இடம் பெற்றூள்ளார்.
பாகிஸ்தான் மண்ணில் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக் பிரியர்லி, ஆஸ்திரேலியா கேப்டன் மார்க் டெய்லர், இந்தியாவின் விரேந்திர சேவாக் ஆகியோர் முச்சதம் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.