காயம் காரணமாக சென்னை அணியில் முக்கிய வீரர் விலகல்? - அதிர்ச்சி தகவல்
காயம் காரணமாக சென்னை அணியில் இருந்து மொயீன் அலி விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 26 ஆம் தேதி கோலகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 38 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த தொடர் தோல்விகளுக்கு அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் இல்லாததே காரணமாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் சென்னை அணியில் எடுக்கப்பட்ட ஆடம் மில்னேவும் விலகியதால் அந்த அணி திணறி வருகிறது.
இதனிடையே ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணியால் தக்க வைக்கப்பட்ட மிடில் ஆர்டரில் தூண் போன்று இருக்கும் முக்கிய வீரர் மொயீன் அலிக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது.
காயம் காரணமாகவே கடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியிலேயே மொயீன் அலி விளையாடவில்லை. அவருக்கு மாற்றாக களம் கண்ட மிட்செல் சாண்ட்னர் சுமாராக விளையாடினார். தொடரின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு மொயீன் அலி தாமதமாக வந்ததால்,சென்னை அணி மிகுந்த சிரமப்பட்டது. தற்போது மீண்டும் அவர் இல்லாத அணி என்பது சிக்கல் நிறைந்ததாக உள்ளது. மொயீன் அலி இதுவரை 5 போட்டிகளில் ஆடி 87 ரன்களை அடித்துள்ளார்.
ஏற்கனவே பாதி வீரர்கள் பார்ம் இன்றி தவித்து வரும் நிலையில் இப்படி காயம் காரணமாக வீரர்கள் விலகுவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.