இங்கு மோடி மஸ்தான் வேலை பலிக்காது - அண்ணாமலையால் ஒன்றும் செய்ய முடியாது..!
அமைச்சர் ரகுபதி திமுக என்ற மாபெரும் சக்தியை எதிர்த்து நிற்பதற்கு தமிழ்நாட்டில் எந்த சக்தியும் எந்த திராணியும் யாருக்கும் இல்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார்.
அமைச்சர் ரகுபதி உரை
தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடைபெற்றது. அதில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “திருச்சி விமான நிலைய திறப்பு விழா நிகழ்ச்சி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது என குறிப்பிட்டு அந்நிகழ்ச்சி மத்திய அரசின் நிகழ்ச்சி, என்பதை உணர்ந்தவர் அறிந்தவர் தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் என்றார்.
இது மத்திய அரசின் நிகழ்ச்சி என்பதால் சற்று அடக்கித்தான் வாசிக்க வேண்டும் என கூறிய அமைச்சர் ரகுபதி, அந்நிகழ்ச்சியில் ஒரு சிலர் முழக்கங்கள் எழுப்பியதை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை அதுதான் என்று விமர்சித்தார்.
இதைவிட சிறிய கட்சி தமிழ்நாட்டில் இருக்க முடியாது என்றும் அவர்கள் ஏதாவது கத்தி விட்டு போக வேண்டும் என்பதற்காக அதை அப்படியே விட்டு விட்டோம் என்று கூறிய அமைச்சர் ரகுபதி, அங்கே நடைபெற்ற விழாவில் திமுகவைச் சேர்ந்தவர்கள் தடுத்து வெளியே நிறுத்தப்பட்டார்கள் என்றும் இதை விட வெட்கக்கேடான விஷயம் வேறு என்ன இருக்க முடியும்? என சாடினார்.
மோடி மஸ்தான் வேலை...
தொடர்ந்து பேசிய அவர், திமுக என்ற மாபெரும் சக்தியை எதிர்த்து நிற்பதற்கு தமிழ்நாட்டில் எந்த சக்தியும் எந்த திராணியும் யாருக்கும் இல்லை என்று உறுதிபட தெரிவித்த அவர், டெபாசிட் வாங்க முடியாத கட்சிகளுக்கு எல்லாம் நாங்கள் கவலைப்படுவது கிடையாது என்றும் அவர்கள் கத்தி கூச்சல் போடுவது பற்றியும் எங்களுக்கு கவலை கிடையாது என்றார்.
மக்களை ஏமாற்றும் மோடி மஸ்தான் வேலையை தற்போது மத்திய அரசு செய்து வருகிறது என விமர்சனம் செய்த அவர், இது தமிழ்நாட்டில் எடுபடாது என்று கூறி, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 சீட்டுகளை திமுக கூட்டணி பெறும் என நம்பிக்கை தெரிவித்து இதனை எடப்பாடியும் ஒன்றும் செய்ய முடியாது, அண்ணாமலையும் ஒன்றும் செய்ய முடியாது என உறுதிபட தெரிவித்தார்.