சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற உள்ள பிரமாண்ட விழாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
இந்தியாவில் முதல் முறையாக
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம் ஆகஸ்டு மாதம் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஆசியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடைபெறுகிறது. இந்த 44-வது செஸ் போட்டியில் 187 நாடுகள் பங்கேற்றுள்ளனர்.இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தான் அதிக வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிலையில் போட்டியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி வருகை
இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 4.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.
பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 5.25 மணிக்கு புறப்பட்டு ஐ.என்.எஸ். அடையாருக்கு 5.45 மணிக்கு வருகிறார்.
பின்னர் அங்கிருந்து 5.50 மணிக்கு சாலை மார்க்கமாக புறப்பட்டு, விழா நடைபெறும் உள் விளையாட்டு அரங்கத்துக்கு மாலை 6 மணிக்கு வந்தடைகிறார்.
இந்த நிகழ்ச்சியில் இரவு 7.30 மணி வரை பங்கேற்கிறார். விழா முடிந்தவுடன் சாலை மார்க்கமாக புறப்பட்டு கிண்டி கவர்னர் மாளிகைக்கு இரவு 7.50 மணிக்கு சென்றடைகிறார்.
அப்போது அவரை முக்கிய பிரமுகர்கள் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கி தரப்பட்டுள்ளது. இரவு கவர்னர் மாளிகையில் தங்கும் நரேந்திர மோடி, நாளை (வெள்ளிக்கிழமை) அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.
இந்த விழாவை முடித்துவிட்டு மதியம் 11.50 மணி அளவில் சென்னையில் இருந்து அவர் புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.