நாட்டிற்கு அதிபராக நினைக்கிறார் பிரதமர்...முதலமைச்சர் முக ஸ்டாலின் மறைமுக விமர்சனம்
கட்சி பிரமுகரின் இல்ல திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையில் பலிகடா ஆவதை அதிமுக அறியவில்லை என குற்றம்சாட்டினார்.
யார் ஆட்சிக்கு வரக்கூடாது என உறுதியாக இருக்கவேண்டும்
திமுகவில் வாரிசு அரசியல் உள்ளது என கூறுபவர்களுக்கு பதிலடி கொடுத்த முக ஸ்டாலின் கழகம் தான் குடும்பம், குடும்பம் தான் கழகம் எனத்தெரிவித்தார்.கொள்கை குடும்பமாக இருக்கிறோம் அது தான் முக்கியம் என குறிப்பிட்ட அவர், யார் காலிலும் தவழ்ந்து சென்று பதவியை பிடிக்கவில்லை என கூறினார்.
மேலும், தமிழ்நாட்டை காப்பாற்ற எப்படி ஒரு வெற்றியை கொடுத்தீர்களோ, அப்படி ஒரு வெற்றி இந்தியாவிற்கும் தேவை என குறிப்பிட்ட அவர், இந்தியா என்ற பெயரை சொல்லவே பாஜக அஞ்சுகிறது என்றும் யார் வரக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கவேண்டும் என கூறினார்.
பலிகடா ஆகப்போவதை அதிமுக அறியவில்லை
தொடர்ந்து பேசிய அவர், ஒரே நாடு ஒரே தேர்தலால் திமுகவிற்கு மட்டுமின்று அனைத்து கட்சிகளுக்குமே பாதிப்பு தான் என சுட்டிக்காட்டி பலிகடா ஆகப்போகிறோம் என்பது தெரியாமல் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவிக்கிறது என்றும் கூறினார். மேலும், நாட்டின் நலனை குறித்து சிந்திக்காமல், நாட்டிற்கு அதிபராக மோடி முயல்கிறார் என மறைமுகமாக விமர்சனம் செய்தார்.
ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்த்த அதிமுக, தற்போது எதிர்க்கட்சியான பிறகு அதனை ஆதரிக்கிறது என குற்றம்சாட்டிய முக ஸ்டாலின், அந்த தேர்தலை நடத்துவதற்காகவே திடீரென நாடாளுமன்றத்தை மத்திய அரசு கூட்டுகிறது என தெரிவித்திருக்கிறார்.