அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை
கொரோனா அதிகரிப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நாளை மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்து வருகிறது.
குறிப்பாக டெல்லி, அரியானா, மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பரவல் மிகவும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா தொற்றின் 4-வது அலை பரவத் தொடங்கி விட்டதாகவும் கருதப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடுமுழுவதும் 2,483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 15,636 ஆக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

இந்நிலையில், கொரோனா அதிகரிப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நாளை மதியம் 12 மணியளவில் மாநில முதலமைச்சர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ள இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.