மோடி பொய் மூட்டைகளுடன் தமிழகம் வந்துள்ளார் - ஸ்டாலின் ஆவேசம்
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இதனால் இறுதிகட்ட பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஏப்ரல் 4-ம் தேதி மாலை உடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. தேர்தல் பிரச்சாரங்களில் பரபரப்பான குற்றச்சாட்டுகள், அடுக்குமொழியான வசனங்கள் எனப் பல சுவாரஸ்யமான விஷயங்கள் முன்வைக்கப்படும்.
தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நிலையில் உள்ளதால் தமிழகத்தின் முக்கியமான தலைவர்கள் மட்டுமல்லாது தேசிய தலைவர்களும் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமர் மோடி நேற்று மதுரையில் பிரச்சாரம் மேற்கொண்டார். உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிரதமர் மோடியின் பிரச்சாரத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளித்து பேசியுள்ளார். நாகையில் பிரச்சார கூட்டத்தில் பேசுகையில், “பிரதமர் மோடி கன்னியாகுமரியில் மீனவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்த துறைமுகம் கொண்டு வருவோம் என்றுள்ளார்.
அந்த துறைமுகம் வேண்டாம் என மக்கள் போராடி வருகின்றனர். மேலும் மீனவர்களை மத்திய அரசு பாதுகாப்பதாகவும் தெரிவித்துள்ளார். எல்லாம் பொய். பிரதமர் பண மூட்டையுடன் வருவார் எனப் பார்த்தால் பொய் மூட்டையுடன் வந்துள்ளார்” என்றார்.