நாள் முதல் புதிய GST; அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் - பிரதமர் மோடி உரை
ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நாளை அமுலுக்கு வருவது குறித்து பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.
ஜிஎஸ்டி மறுசீரமைப்பு
இந்தியாவில், 5%, 12%, 18%, 28% ஆகிய 4 அடுக்குகளில் GST வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், 12 மற்றும் 28 அடுக்குகள் நீக்கப்பட்டு, 5%, மற்றும் 18% அடுக்குகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பல்வேறு பொருட்களின் விலை குறைவதோடு, சில பொருட்களின் விலை அதிகரிக்க உள்ளது. இந்த புதிய ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நாளை முதல் அமுலுக்கு வருகிறது.
இந்நிலையில், இந்திய பிரதமர் மோடி இன்று மக்களிடையே உரையாற்றினார்.
மோடி உரை
இதில் பேசிய அவர், "நாட்டு மக்களுக்கு நவராத்திரி வாழ்த்துகள். நவராத்திரியின் முதல் நாளில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலாகின்றன. இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் தொடங்குகிறது. நாளை காலை முதல் ஜிஎஸ்டி சலுகைகள் அமலுக்கு வருகிறது.
உங்களுக்குப் பிடித்தமான அத்தியாவசிய பொருள்களை குறைந்த விலை கொடுத்து நாளை முதல் வாங்கலாம். சேமிப்பு அதிகரிக்கும். இதனால் ஏழைகள், நடுத்தர மக்கள், பெண்கள், வணிகர்கள் என அனைவரும் பயன் பெறுவர்.
ஜிஎஸ்டி அமலுக்கு வருவதற்கு முன்பு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மறைமுக வரி இருந்தது. இதனால் பெங்களூரில் இருந்து ஹைதராபாத்துக்குப் பொருட்களை அனுப்பி, அதை ஐரோப்பாவுக்கு அனுப்பி, அங்கிருந்து ஹைதராபாத்திற்கு அனுப்பி வந்தன.
மறைமுக வரி எவ்வளவு சிக்கலாக இருந்தது என்பதை இது காட்டுகிறது. முன்பு வரி விவகாரத்தில் பல சிக்கல்களைக் கடக்க வேண்டி இருந்தது. ஆனால், இப்போது அந்த நிலையை மாற்றியுள்ளோம். தொழில் செய்ய இருந்த தடைகளை அகற்றி இருக்கிறோம்
12% GSTல் இருந்த 99% பொருட்கள், 5% GSTக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் பிரட், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை நாளை முதல் குறையும்.
வெளிநாட்டு பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்து, உள்நாட்டு தயாரிப்புகளை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தால்தான் இந்தியா வேகமான வளர்ச்சியை அடையும்.
'தற்சார்பு இந்தியா' என்ற இலக்கை எட்டுவதில் MSMEகளின் பணி முக்கியமானது. GST குறைப்பால் பெறும் பலன்களை வைத்து உலகத் தரமிக்க பொருட்களை தயாரிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.