‘‘இலங்கை போர்க்குற்றம் விவகாரம் மோடி மௌனம்; பேரதிர்ச்சி’’: மு.க ஸ்டாலின் ட்வீட்

srilanka modi war stalin
By Jon Mar 21, 2021 02:10 PM GMT
Report

கடந்த பிப்ரவரி மாதம் ஐ.நா. மனித உரிமை தலைமை ஆணையர் அதன் உறுப்பு நாடுகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து சுற்றறிக்கை அனுப்பினார். அதில் இலங்கை அரசு நடத்திய படுகொலைகள், போர்க்குற்றங்களுக்காக அந்நாட்டு ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை நடத்த வேண்டும்.

இதற்கான முன்னெடுப்பை ஐ.நா. பொதுப் பேரவையும், பாதுகாப்புக் குழுவும் எடுக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிச் செயல்பட உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஐ.நாவின் இந்த தீர்மானத்திற்கு பிரிட்டன், கனடா, ஜெர்மனி, வடக்கு மாசிடோனியா, மலாவி, மாண்டினிக்ரோ உள்ளிட்ட ஆறு நாடுகள் முன்மொழிந்துள்ளன.

ஆனால் இந்திய அரசு மௌனம் காத்துவரும் நிலையில் இலங்கை வெளியுறவுத் துறைச் செயலாளர் ஜெயநாத் கெலம்பகே, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக்காது. இலங்கை அரசைத்தான் ஆதரிக்கப்போகிறது என்று கூறியதாக செய்தி வெளியானது . இந்த தகவலை கண்டித்து வைகோ அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில். தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில் போர்க்குற்றங்களுக்கு எதிரான வாக்கெடுப்பில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது. இலங்கைத் தமிழர்களுக்கு அநீதியான நிலைப்பாட்டை இந்தியா எடுத்திடவே கூடாது; சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடந்திட பிரதமர் மோடியின் முன்னெடுப்பு தேவை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் 2009, 2012, 2013, 2014 ஆகிய நான்கு முறை நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியா மூன்றுமுறை மட்டுமே வாக்களித்துள்ளது. 2014-ம் ஆண்டு வாக்களிக்கவில்லை. தற்போது நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் இந்தியா தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகக் கூறவில்லை.

பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கையை வைத்தவரும் நிலையில், நாளை நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் இந்தியா என்ன முடிவெடுக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.