திமுக ஆட்சியை CMC ஆட்சி என மக்கள் அழைக்கிறார்கள் - மோடி குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் இரட்டை எஞ்சின் ஆட்சி அமைவது உறுதியாகி விட்டது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
மதுராந்தகத்தில் மோடி பேச்சு
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் இன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது.

இதில், இந்திய பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "தமிழ் சகோதர சகோதரிகளுக்கு வணக்கம். 2026 ஆம் ஆண்டில் எனது முதல் பயணம் இது. பொங்கலுக்குப் பின் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளனர்.
இங்கே அலைகடலென திரண்டுள்ள மக்கள் நாட்டிற்கு ஒரு செய்தியை உணர்த்துகிறார்கள். தமிழ்நாட்டுக்கும், நாட்டிற்கும் ஒரு முக்கிய செய்தியை அளிக்கிறது. அந்த செய்தி, ஆட்சி மாற்றத்துக்கு தமிழ்நாடு இப்போது தயாராகிவிட்டது.

தமிழ்நாடு என்டிஏ - பாஜகவின் அரசை விரும்புகிறது. தமிழ்நாட்டை ஊழலற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். இப்போது திமுகவின் முடிவுரைக்கான கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது.
திமுக ஆட்சி CMC ஆட்சி
திமுக ஆட்சியை CMC ஆட்சி என்று கூறுகிறார்கள். அதாவது ஊழல்(corruption), குற்றவாளி குழுக்கள்(mafia) , குற்றங்களை(crime) ஆதரிக்கும்.
திமுக அரசாங்கம் நமது இளைஞர்களை போதைப்பொருள் குற்றவாளி கும்பலிடம் ஒப்படைத்து விட்டது. போதைப்பொருளில் இருந்து அவர்களை மீட்க வேண்டும்.

போதைப்பொருள் மற்றும் மதுபான குற்றவாளிகள் திமுக ஆட்சியில் செழிப்பாக இருக்கிறார்கள். திமுக ஆட்சி ஒரே ஒரு குடும்பத்திற்காக மட்டுமே இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் இரட்டை எஞ்சின் ஆட்சி அமைவது உறுதியாகி விட்டது.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் NDA அரசை உருவாக்கி தாருங்கள். பெண்களுக்கு பாதுகாப்பான, ஊழலற்ற மாநிலமாக மாற்றுவோம்" என தெரிவித்துள்ளார்.