கொரோனா தடுப்பூசி சான்றிதழில் மோடியின் புகைப்படமா? எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதன் மூலம் பாஜக தேர்தல் ஆதாயம் தேடுவதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
உலகின் வேறு எந்த நாட்டிலும் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழிலும் எந்த தலைவர்களின் படமும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி மாதிரியான விஷயங்களில் அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சிக்கக்கூடாது என்றும் எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன.

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. முதலில் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில் மார்ச் முதல் முதியவர்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது. கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் வழங்கப்படும்.
முதல் டோஸ் எடுத்துக்கொண்ட பிறகு சிறிய இடைவெளி கழித்து இரண்டாவது டோஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதற்கான தகவல்களும் அந்த சான்றிதழில் வழங்கப்படும். அதில் மோடியின் புகைப்படத்தோடு ’இணைந்து நாம் கொரோனாவை வீழ்த்துவோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.