மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் பேச மறுத்த மம்தா பேனர்ஜி
தமிழகத்தைப் போல மேற்கு வங்கத்திலும் இன்னும் இரண்டு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆளும் திரினாமுல் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
திரினாமுல் காங்கிரஸை சேர்ந்த பலரும் தொடர்ச்சியாக பாஜகவில் இணைந்து வருகின்றனர். இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. திரினாமுல், பாஜக என இருவருமே நேதாஜியை சொந்தம் கொண்டாட போராடி வருகின்றனர்.
அவ்வாறு இன்று கல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்விற்கு மம்தா பேனர்ஜிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அப்போது மம்தா பேனர்ஜி பேச முற்பட்டபோது கூட்டத்தினர் அவரை இடைமறித்து கோஷங்களை எழுப்பினர்.
இதனால் கோபமடைந்த மம்தா அரசு நிகழ்விற்கு அழைத்துவிட்டு அவமானப்படுத்தக்கூடாது எனத் தெரிவித்து பேச மறுத்துவிட்டார்.
அதே மேடையில் பிரதமர் மோடியும் மேற்கு வங்க ஆளுநரும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.