மோடி இந்திய நிலப்பரப்பை சீனாவுக்கு விட்டுக் கொடுத்துவிட்டார்: ராகுல் காந்தி தாக்கு
இந்தியா - சீனா இடையே கடந்த சில மாதங்களாக எல்லைப் பகுதியில் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் எல்லையில் அமைதியற்ற நிலை நீடித்து வருகிறது. சீனா இந்திய எல்லையை ஆக்கிரமித்து கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருவது செயற்கை கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்திய எல்லைப் பகுதிக்கு உள்பட்ட நிலப்பரப்பை, பிரதமர் நரேந்திர மோடி, சீனத்துக்கு விட்டுக் கொடுத்துவிட்டார், இது குறித்து மோடியும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
கிழக்கு லடாக் தொடர்பான நிலைப்பாடு குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் மாநிலங்களைவில் நேற்று ஒரு அறிக்கையை வாசித்தார். அதில், நமது படைகள் ஃபிங்கர் 3 பகுதிக்குச் செல்ல விருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஃபிங்கர் 4 நிலப்பரப்பும் நமது எல்லைக்குட்பட்டதே. அங்குதான் நமது படைகள் முகாமிடுவது வழக்கம். ஆனால், ஏன் நமது நிலப்பரப்பை பிரதமர் நரேந்திர மோடி சீனத்துக்கு விட்டுக் கொடுத்தார்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
நமது ராணுவப் படைகள் மிகக் கடுமையாகப் போராடி கைலாஷ் பகுதியைக் கைப்பற்றியது, ஆனால், ஏன் தற்போது அங்கிருந்து நமது படைகளை பின்வாங்கச் சொல்ல வேண்டும்? இதற்கு பதிலாக இந்தியாவுக்கு கிடைக்கப் போவது என்ன? தேப்சங் சமவெளிப் பகுதிதான் மிக முக்கியப் பகுதியாகும்.
ஆனால் அங்கு படைகளைக் குவித்திருக்கும் சீன ராணுவம் ஏன் அங்கிருந்து பின்வாங்கவில்லை? அவர்கள் ஏன் கோக்ரா மற்றும் ஹாட் ஸ்பிரிங் பகுதிகளிலிருந்து பின்வாங்கவில்லை? இதன் மூலம் இந்திய நிலப்பரப்பை பிரதமர் மோடி சீனத்துக்கு விட்டுக் கொடுத்துவிட்டார் என்பது தெரிகிறது என்று ராகுல் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.