புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார் மோடி - சிறப்பம்சங்கள் என்ன?

Tamil nadu Narendra Modi Rameswaram
By Karthikraja Apr 06, 2025 08:29 AM GMT
Report

 1914-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பாம்பன் பகுதியில் கட்டப்பட்ட இந்த பாலம், இந்தியாவில் கடல் பகுதியின் மேல் அமைக்கப்பட்ட முதல் ரெயில்வே பாலம் என்ற சிறப்பை பெற்றது.

நூறாண்டுகளை கடந்த இந்த பாலத்தின் உறுதித்தன்மை குறைந்த நிலையில், ரூ.550 கோடி மதிப்பில் புதிய ரயில் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

பாம்பன் பாலம் திறப்பு

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தப் பணிகள் முடிவடைந்து, சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டு பரிசோதித்த பின்னர், தற்போது போக்குவரத்துக்கு  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

new pamban bridge

இலங்கை பயணம் முடித்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்த இந்திய பிரதமர் மோடி, புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தை திறந்து வைத்துள்ளார். மோடியின் வருகையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

தமிழக பாராம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வந்த பிரதமர் மோடி, மேடையில் இருந்து புதிய ரயில் பாலத்தை ரிமோட் கண்ட்ரோல் மூலம் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

modi pamban bridge

அதைத்தொடர்ந்து, ராமேஸ்வரத்தில் இருந்து தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றையும் தொடங்கி வைத்துள்ளார். தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு, விழுப்புரம், திரிப்பாதிபுலியூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரத்துக்கு இந்த புதிய ரயில் இயக்கப்படுகிறது.

பாம்பன் பால சிறப்புகள்

புதிய ரயில் பாலத்தை கப்பல்கள், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கடந்து செல்ல பாலம் நடுவில் 240 அடி நீளம் 570 டன்னில் வடிவமைத்த செங்குத்து துாக்கு பாலம் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய பாம்பன் பாலத்தில், கப்பல் கடக்கும் போது, ​​ஸ்பான்கள் திறக்கப்படுவதற்குப் பதிலாக, அது இப்போது கடலுக்கு மேலே உயரும். 

பாம்பன் பாலத்தின் நடுப்பகுதியில் 72.5 மீட்டர் நீளமுள்ள தூக்கு பகுதி 17 மீட்டர் உயரம் வரை உயரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால், பெரிய கப்பல்கள் கூட எளிதாக கடந்து செல்ல முடியும்.

கடலுக்கு நடுவே பாலம் உள்ள நிலையில், அதிகளவில் துருப்பிடிக்க வாய்ப்புள்ளதால், துருப்பிடிப்பதை தவிர்க்க பல்வேறு அடுக்குகளாக பெயிண்ட்கள் அடிக்கப்பட்டுள்ளது.

முதல் அடுக்கில் 200 மைக்ரான் துத்தநாக கலவை, அடுத்த அடுக்கில் 25 மைக்ரான் ஜெல்லி போன்ற எபோக்ஸி பூச்சு, கடைசி மேல் அடுக்கில் சிலிக்கான் ஆக்சிஜன் கலந்த சிந்தடிக் பாலிமர் பூச்சு செய்யப்பட்டுள்ளது.

ஒருமுறை இவை பூசப்படுவதால் 35 ஆண்டுகள் வரை துருப்பிடிப்பில் இருந்து பாதுகாக்கும், இதனால் ரயில் பாலம் உறுதித்தன்மையுடன் 100 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர். .