நிறைவுப்பெற்ற ஜி 20 மாநாடு...தலைமை பொறுப்பை பிரேசிலிடம் ஒப்படைத்த பிரதமர் மோடி
டெல்லியில் நடைபெற்று வரும் ஜி 20 உச்சி மாநாடு நிறைவடைந்ததை அடுத்து அடுத்த ஆண்டிற்கான பொறுப்பை பிரேசில் அதிபரிடம் மோடி வழங்கினார்.
ஜி 20 உச்சிமாநாடு
டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு இந்திய பிரதமர் மோடி தலைமை தாங்கினார். டெல்லியில் அமைந்துள்ள பிரகதி மைதானத்திலுள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 மாநாட்டின் இரண்டாம் நாள் கூட்டம் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரேசிலில் நடக்கும் ஜி20 அமைப்பின் உயரடுக்கு குழுவின் தலைவர் பதவிக்கான அடையாளக் குறியீடை பிரேசில் அதிபரிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
முடிவடைந்த மாநாடு
இதன் பிறகு மோடி பேசும் போது, வரும் நவம்பர் மாதம் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஜி20 தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்துவோம் என கூறினார். இதனை தொடர்ந்து பேசிய பிரேசில் நாட்டின் அதிபர் லுலா டா சில்வா, "வளர்ந்து வரும் பொருளாதாரம் தொடர்பான தலைப்புகளில் விவாதிக்க இந்தியா எடுக்கும் முயற்சிகளுக்கு மோடிக்கு வாழ்த்துகள் என குறிப்பிட்டு, சமூக உள்ளடக்கம், பசிக்கு எதிரான போராட்டம், எரிசக்தி மாற்றம், நிலையான வளர்ச்சி ஆகியவையே ஜி20-க்கான முன்னுரிமைகள் என கூறினார்.
சுகாதாரம், கல்வி, உணவு, பாலினம், இனம் ஆகியவற்றுக்கான அணுகுமுறையில் முரண்பாடுகள் இருக்கும் காரணத்தால் ஏற்படும் சமத்துவமின்மை பிரச்னையை ஆக்கபூர்வமான சிந்தனைகள் மூலம் நாம் எதிர்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, ஜி20 மாநாடு முடிவடைந்ததை அடுத்து உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.