மோடி அரசு இருக்கும் வரை போராட்டம் தொடரும் - விவசாய சங்கங்கள் அறிவிப்பு
மோடி அரசு அதிகாரத்தில் இருக்கும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த நவம்பர் மாதம் முதல் 100 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் அனைத்துமே தோல்வியில் முடிந்துள்ளன.
ஜனவரி 26-ம் தேதி நடைபெற்ற வன்முறைக்குப் பிறகு இரு தரப்புக்கும் இடையே ஆன பேச்சுவார்த்தை ஸ்தம்பித்துள்ளது. வேளாண் சட்டங்களை முழுமையாக பின்வாங்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு முன்வைத்த சமரசங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என விவசாயிகளும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மோடி அரசு இருக்கும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும் என பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகேத்தின் சகோதரர் நரேந்திர திகேத் தெரிவித்துள்ளார்.