அமெரிக்க அதிபரை சந்தித்தார் பிரதமர் மோடி - இருநாடுகளின் நல்லுறவு குறித்து ஆலோசனை
அமெரிக்க சென்றுள்ள பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
ஐ.நா. பொதுச் சபை கூட்டம், நாற்கரக் கூட்டமைப்பின் மாநாடு (க்வாட்) உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி நேற்று அமெரிக்கா சென்றார். அவரை அமெரிக்க அரசின் சார்பில் அந்த நாட்டின் வெளியுறவு துணைச்செயலாளர் (நிர்வாகம் மற்றும் வளங்கள்) பிரையன் மெக்கீன், இந்திய தூதர் தரண்ஜித் சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
வரவேற்பு நிகழ்ச்சிகளுக்குப்பின் பிரதமர் மோடி அமெரிக்காவில் தனது அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளை தொடங்கினார். இதில் முதலாவதாக அமெரிக்காவை சேர்ந்த 5 உயர் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்து பேசினார். தொடர்ந்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை சந்தித்து இருநாட்டு நல்லுறவு குறித்து விவாதித்தார்.
அதன்பிறகு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை பிரதமர் மோடி சந்தித்துப்பேசினார். இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தலைமையில் நடைபெற்ற உலகளாவிய கொரோனா தடுப்பு உச்சி மாநாட்டில் பிரதமா் மோடி காணொலி மூலம் பங்கேற்றுப் பேசினாா்.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இருதரப்பு உறவு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, வணிகம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து இருவரும் இந்த சந்திப்பின்போது விவாதிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.