பிரதமருக்கு எப்போதும் என் நினைப்பு தான் - உதயநிதி!!
பிரதமர் மோடிக்கு எப்போதும் தன்னை பற்றி தான் நினைப்பு இருப்பதால் தான் மத்திய பிரதேசத்தில் கூட தன்னை பற்றி அவர் பேசி வருகிறார் என உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
கோவை செயல்வீரர்கள் கூட்டம்
மாநில இளைஞர் அணி மாநாட்டை சிறப்பாக நடத்துவதில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மும்முரமாக இயங்கி வருகின்றார்.
அதில் ஒரு பகுதியாக அவர் கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் கோவையில் தான் முதல் திராவிட இயக்க தலைவர்கள் சந்திப்பு நடைபெற்றது என குறிப்பிட்டு, இந்த மாவட்டத்தில் கலைஞர் கால்படாத இடமே இல்லை எனக்கூறினார்.
தமிழகத்தின் முதல் வேளாண்மை பல்கலைகழகம், சிறுவாணி கூட்டு குடிநீர் திட்டம், டைடல் பார்க், பில்லூர் கூட்டுகுடிநீர் திட்டத்தை கலைஞர் கொண்டு வந்தார் என பட்டியலிட்ட அமைச்சர் உதயநிதி, இந்த செயல்வீரர்கள் கூட்டமே மினி மாநாடு போல உள்ளது என்றும் மாநாட்டு நிதியாக கோவை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக 3.37 கோடி ரூபாய் வழங்கியுள்ளனர் என பேசினார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அரசியல் இயக்கங்கள் எழுச்சியை காட்ட மாநாடுகள் நடத்தும் நேரத்தில் திமுக தலைவர் மாநாட்டை நடத்த இளைஞர் அணிக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் என்றும் அது இளைஞர்கள் மீது தலைவர் வைத்துள்ள நம்பிக்கை என குறிப்பிட்ட அவர், அதை நாம் காப்பாற்ற வேண்டும் என்று தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார்.
எல்லாருமே கலைஞர் பேரன் தான்
மூன்று மாதத்திற்கு முன்பு மதுரையில் கேலிக்கூத்தான மாநாடு நடத்தப்பட்டது என்று விமர்சித்த உதயநிதி ஸ்டாலின், ஆனால் திமுக இளைஞர் அணி சேலம் மாநாடு இந்தியாவிலேயே எப்படி ஒரு மாநாடு நடத்த வேண்டும் என்பதை போல நடத்தி காட்ட வேண்டும் என்றும் கூறினார்.
பிரதமர் மோடி எப்போதும் என்னுடைய நினைப்பு தான் என்ற அவர், கடந்த வாரம் மத்தியபிரதேச மாநில தேர்தல் பிரச்சாரத்தில் கூட தன்னை பற்றி பேசினார் என்பதை குறிப்பிட்ட உதயநிதி, அவருக்கு பிறப்பால் அனைவரும் சமம் என்று தான் பேசினேன் என்றும் ஆனால் இனப்படுகொலை தூண்டினேன் என பிரச்சாரம் செய்கின்றனர் என கண்டித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சியல் கலைஞர் குடும்பம் தான் வாழ்கிறது என்பதற்கு ஆமாம் தமிழகத்தில் நாங்கள் அனைவரும் கலைஞர் குடும்பம் தான் என்றும் நான் மட்டும் அல்ல அனைவரும் கலைஞர் பேரன்கள், வாரிசுகள் தான் என்று கூறினார்.