முழு ஊரடங்கு எதிரொலி... திண்டுக்கலில் நடமாடும் காய்கறி விற்பனை தொடக்கம்...
முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் பயன்பெறும் விதமாக வீடுகளுக்கு தேடி வரும் காய்கறி விற்பனை ,பழ விற்பனை மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை வாகனங்களை கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கலில் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு பிறப்பிக்கபட்டுள்ளது. இதன் காரணமாக காய்கறி மற்றும் மளிகை கடைகள் உட்பட அனைத்து விதமான கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் காய்கறி, மளிகை மற்றும் பழங்கள் ஆகிய பொருட்களை எளிதில் பெறும் வகையில் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி இன்று திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கூட்டுறவுத்துறை, உணவு வழங்கல் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட துறைகள் சார்பாக மொத்தம் 233 வாகனங்கள் மூலம் காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நடமாடும் விற்பனை சேவையை கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேவைப்படும் பட்சத்தில் கூடுதலான வாகனங்கள் ஏற்பாடு செய்யப்படும் என்றும், மக்கள் நலனில் அக்கறை உள்ள முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார் என்றும் தெரிவித்தார்.