பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: செப்டம்பர் 1 முதல் கோயில்களில் மொபைலுக்கு தடை!
கோயில்களில் ரீல்ஸ் மற்றும் புகைப்படங்கள் எடுப்பதைத் தடுக்கும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதன்படி, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை திருக்கோயில்களில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல முழுமையாகத் தடை விதிக்கப்பட உள்ளது.
கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுப்பது, வீடியோ பதிவு செய்வது மற்றும் புகைப்படம் எடுப்பதைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

ரீல்ஸ் மோகத்திற்கு முற்றுப்புள்ளி
குறிப்பாக, கோயில்களில் உள்ள தெய்வச் சிலைகள் மற்றும் கருவறைகளை புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நடிகர், நடிகைகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கோயிலுக்கு வருகை தரும் விவரங்களை ஒரு நாள் முன்பாக ஆணையருக்கு கோயில் நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர்களின் வருகையின்போது கோயில் வளாகத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல் போன்களை பாதுகாப்பாக வைப்பதற்கான மொபைல் பாதுகாப்பு வசதிகளை அடுத்த 20 நாட்களுக்குள் முதுநிலை கோயில்களில் ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கோயில்களின் புனிதத்தன்மையைப் பாதுகாப்பதுடன், அனுமதியின்றி புகைப்படம், வீடியோ மற்றும் ரீல்ஸ் எடுப்பதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.