உங்கள் குழந்தை நீண்ட நேரம் மொபைல் பார்க்கிறதா? எச்சரிக்கும் மருத்துவர்கள்!
பள்ளி, கல்லூரி செல்லும் குழந்தைகள், இளைஞர்கள் மொபைல் வைத்திருப்பது மிகப்பெரிய தவறான செயலாக ஒரு காலத்தில் பார்க்கப்பட்டது. நாகரீக, தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால், பள்ளி செல்லும் குழந்தைகளைப் பொறுத்தவரையில் அவர்களின் கண்கள் பாதிக்கப்படக் கூடும், மொபைல் போனை பயன்படுத்தினால் படிப்பில் கவனம் குறைந்துவிடும். மொபைல் கேம் போன்றவற்றில் அவர்கள் கவனம் சென்றுவிடும் என்று கூறப்பட்டது. குழந்தைகளின் கற்றல் திறனே பாதிக்கப்படக் கூடும் என்பதால் மொபைல் போனை வழங்க வேண்டாம் என்று கல்வியாளர்கள் கூறி வந்தனர்.
ஆனால் கொரோனா தொற்றுக்குப் பிறகு ப்ரீகேஜி குழந்தைகளுக்கு கூட மொபைல் வைத்து ஆன்லைன் கிளாஸ் நடத்தும் சூழல் வந்துவிட்டது. ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு மணி நேரமாவது குழந்தைகள் மொபைல், லேப்டாப்பில் நேரத்தை செலவிடுகின்றனர். இது தவிர தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை பார்க்கின்றனர். ஒரு நாளைக்கு 60 நிமிடத்திற்கு மேல் மொபைல், லேப்டாப், டி.வி பயன்படுத்தும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுவதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட அடலசன்ட் பிரைன் காக்னிடிவ் டெவலப்மெண்ட் ஸ்டெடி ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் வரையில் மொபைல் போனை பார்த்து, கேம் விளையாடும் குழந்தைகளின் மூளையை எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து பார்த்ததில் அவர்களுக்கும் மொபைல் பயன்படுத்தாத குழந்தைகளுக்குமான மூளையில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்துக்கு மேல் மொபைல் பயன்படுத்திய குழந்தைகளுக்கும் கூட மொழி திறன் பரிசோதனையில் குறைவான மதிப்பெண் கிடைத்துள்ளது.
இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள், 18 மாதத்துக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மொபைல் போனை கொடுக்கவே கூடாது. 18 முதல் 24 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு சிறிது நேரத்துக்கு பெற்றோர்களுடன் சேர்ந்து டி.வி பார்க்கும் வகையில் தரமான நிகழ்ச்சிகளை காட்டலாம்.
2 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கு மிகாமல் டி.வி-யில் தரமான நிகழ்ச்சிகளை பெற்றோருடன் பார்க்க அனுமதிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி, லேப்டாப், மொபைல் பயன்படுத்துவதால் கண்கள் சோர்வடையும். கண்களில் கொஞ்சம் கொஞ்சமாக கண்ணீர் சுரப்பு குறையும். இதனால் பார்வை திறன் மங்க ஆரம்பிக்கும்