மத்தியில் இருப்பது ஒன்றிய அரசு கிடையாது.. மக்களோடு ஒன்றாத அரசு - கமல்ஹாசன் பேச்சு!
தமிழ்நாடு மீனவர்களை காக்க தவறிய அரசு இந்த ஒன்றிய அரசு என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
கமல்ஹாசன்
சிதம்பரம் மக்களவை தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய கமல்ஹாசன் "சாதியே இல்லை என்கிறீர்கள். சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்கிறீர்களே என்று கேட்கலாம்.
இன்னும் எத்தனை பேர் அடிக்கோட்டு விளிம்பில் இருக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரிய வேண்டும். ஏனென்றால், இங்கு அமெரிக்கா மாதிரி வெள்ளை, கருப்பு என்கிற பிரிவு கிடையாது. மாநிறத்தில் இருப்பவனும் விளங்கு போட்டு இருப்பான். கருப்பாக இருப்பவனும் விளங்கு போட்டு இருப்பான்.
கோபம் வருகிறது
அவனை எல்லாம் விடுவிக்க வேண்டும். தமிழ்நாடு மீனவர்களை காக்க தவறிய அரசு இந்த ஒன்றிய அரசு. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் எப்போதும் இல்லாத அளவில் நம் மீனவர்கள் கைதாவதும், சிறையில் அடைக்கப்படுவதும் இன்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசு என்று சொன்னால் இவர்களுக்கு கோபம் வருகிறது.
இவர்கள் ஒன்றிய அரசு கிடையாது. மக்களோடு ஒன்றாத அரசு. இதனால் தான் திருமாவளவனோடு தோள் உரசி களம் காண்கிறேன். தமிழ்நாட்டின் குரலாக ஸ்டாலின் திகழ்கிறார்.. இளைஞர்களின் குரலாக தம்பி உதயநிதி திகழ்கிறார்.. குரலற்றவர்களின் குரலாக பெருஞ்சிறுத்தை திருமாவளவன் இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.