துரோகிகள் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் டாக்டர் மகேந்திரன் - கமல் ஹாசனின் காட்டமான அறிக்கை
துரோகிகளை களையெடுங்கள் என்பது தான் அனைவரின் ஒருமித்த குரலாக இருந்தது. அதில் முதல் நபராக டாக்டர் மகேந்திரன் உள்ளதாக மநீம தலைவர் கமல்ஹாசன் காட்டமான அறிக்கை.
தமிழக சட்டமன்ற தேர்தலில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வி சந்தித்தது. இதன் எதிரொலியாக கமல் ஹாசன் அவர்கள் கட்சி நிர்வாகிகளோடு சேர்ந்து முக்கிய முடிவுகளை எடுப்பது குறித்து ஆலோசித்து வந்தார். இந்த நிலையில் திடீரென மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகுவதாக அதன் துணை தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது,
"தன்னை எப்படியும் விலக்கி விடுவார்கள் என தெரிந்துகொண்ட ஒருவர் புத்திசாலித்தனமாக தன்னை விலக்கிக் கொண்டார். ஒரு களையே தன்னைக் களையென்று எண்ணி விலக்கிக்கொண்டதில் உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன். இனி நமது கட்சிக்கு ஏறுமுகம் தான்.
என்னுடைய வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுமே வெளிப்டையானவை தான். நான் செய்த தவறுகளை ஒருபோதும் மறுக்கவோ,மறைக்கவோ முயற்சித்தது இல்லை. என் சகோதர சகோதரிகளான மக்கள் நீதி மய்யத்தின் குடும்ப உறுப்பினர்களுக்கு மனம் தளர வேண்டாம் என ஆறுதல் கூற தேவையில்லை. உங்கள் வீரமும், தியாகமும் ஊர் அறிந்தவை.
தோல்வியின்போது கூடாரத்தை பிய்த்துக்கொண்டு ஓடிய கோழைகளைப் பற்றி நாம் பொருட்படுத்த தேவையில்லை. கொண்ட கொள்கையில்,தேர்ந்த பாதையில் எந்த மாற்றமும் இல்லை. மண்மொழி மக்கள் காக்க களத்தில் நிற்போம்." இவ்வாறு அந்த அறிக்கையில் கமல் ஹாசன் தெரிவித்திருந்தார்.
