திமுக கூட்டணியில் கமல்? தொடர்ந்து முயற்சித்து வரும் காங்கிரஸ்.!
தமிழகத்தில் திமுக தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தற்போது இருந்து வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கும் இந்தக் கூட்டணி தொடரும் எனச் சொல்லப்பட்டு வருகிறது. திமுக தலைமையிலான மதசார்ப்பற்ற கூட்டணிக்கு கமல்ஹாசன் ஆதரவு தர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.
கே.எஸ்.அழகிரி மட்டுமல்லாது எம்.பி.கார்த்தி சிதம்பரமும் கமல்ஹாசன் காங்கிரஸ் கூட்டணியில் இணைய வேண்டும் அல்லது காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்குமே கமல்ஹாசன் திமுக கூட்டணியில் இணைய உள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டன.
ஆனால் கமல் அப்போது அதை மறுத்துவிட்டார். தமிழகம் வரும் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி வரும் 24ம் தேதி ஈரோட்டில் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். இதற்கான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் சஞ்சய்தத் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், பொள்ளாச்சி சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளை தப்ப வைக்கும் முயற்சியில், அதிமுக அரசு உடந்தையாக இருப்பதாகக் குறை கூறினார். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் தங்களுடன் கூட்டணி சேர வேண்டும் என்றும் கே.எஸ்.அழகிரி விருப்பம் தெரிவித்தார்.
திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணிக்கு கமல் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்தார்.
ஆனால் காங்கிரஸின் இந்த கருத்துக்கு திமுக தற்போது வரை எந்த பதில் கருத்தும் தெரிவிக்கவில்லை.