தேர்தலில் தோல்வி , மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை

mnmcandidate suicidetiruppur
By Irumporai Feb 25, 2022 09:57 AM GMT
Report

திருப்பூர் மாநகராட்சி 36-வது வார்டில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர், விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் கல்லூரி சாலை கொங்கணகிரி பகுதியை சேர்ந்தவர் மணி(56). மூட்டை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி சுப்பாத்தாள். மணி, நகடிர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினராக பொறுப்பு வகித்து வந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற திருப்பூர் மாநகராட்சி தேர்தலில், 36-வது வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மணி போட்டியிட்டார். அப்போது, தேர்தல் செலவிற்காக தெரிந்தவர்களிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். மேலும், அந்த பகுதியில் தனக்கு நல்ல அறிமுகம் உள்ளதால், நிச்சயம் வெற்றி பெற்றுவிடலாம் என நம்பியுள்ளார்.  

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது 36-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திவாகரன் என்பவர் 3,319 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மணிக்கு, 44 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.

தேர்தலில் தோல்வி , மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை | Mnm Candidate Commits Suicide In Tiruppur

இதனால், அவர் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். மேலும், தேர்தல் செலவிற்காக வாங்கிய கடனை எப்படி திருப்பிக் கொடுப்பது? என்றும் தவிப்பில் இருந்துள்ளார். இதுதொடர்பாக நேற்று மணிக்கும், அவரது மனைவி சுப்பாத்தாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதில் வாழ்வில் விரக்தியடைந்த மணி நேற்றிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசார், மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.