திமுக கட்சியல்ல.. அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

india ops stalin
By Jon Jan 21, 2021 06:51 PM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெற்றிநடை போடும் தமிழகம் என்கிற பெயரில் அதிமுகவும் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்கிற பெயரில் திமுகவும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஆற்றிய உரையில், சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற காரணத்தினால், இன்றைக்கு ஸ்டாலின் அவர்கள் ஊர், ஊராக சென்று பொய்யான செய்திகளை பரப்பி வருகிறார். ஊடகங்கள் வாயிலாக பொய்யான அறிக்கையினை வெளியிட்டு வருகிறார். கிராம சபை கூட்டம் என்ற பெயரிலே, அவர்கள் தயார் செய்த பெண்களை அமர்த்தி அவதூறு பரப்பி வருகிறார்.

இதே போன்று கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலிலே திண்ணையில் அமர்ந்து மனு பெற்றார். அதற்கு ஏதும் செய்தாரா? இல்லை. இவ்வாறு அப்பாவி பொதுமக்களை அமரவைத்து அரசுக்கு எதிரான பொய்யான பிரசாரத்தை பரப்பி வருகிறார். பொய்யான வாக்குறுதிகள் மூலம் மக்களை குழப்பி கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலிலே தி.மு.க. வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற பின் தமிழ்நாட்டு மக்களுக்காக நாடாளுமன்றத்திலே ஏதேனும் குரல் கொடுத்தார்களா? இல்லை. அதே போன்றதொரு உத்தியை கையாண்டு, பொய்யான வாக்குறுதிகள் மூலம் இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று விடலாம் என நினைக்கிறார் ஸ்டாலின். அது ஒரு போதும் நடக்காது. திமுக குடும்ப கட்சி. அவர்கள் குடும்பத்திலே இருக்கின்றவர்கள் தான் பதவிக்கு வர முடியும்.

வேறு யாரும் பதவிக்கு முடியாது. அப்படி தான் இன்றைக்கு அந்த கட்சி போய் கொண்டிருக்கிறது. அது கட்சியல்ல அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அந்த கம்பெனியில் ஸ்டாலின் சேர்மன், குடும்ப உறுப்பினர்கள் தான் டைரக்டர்கள். வேறு யாரையும் டைரக்டராக போட மாட்டார்கள்.

அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் தான் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். ஸ்டாலின் போகிறார், உதயநிதி போகிறார், கனிமொழி போகிறார், தயாநிதி மாறன் போகிறார். மற்றவர்கள் யாரும் திமுக கட்சியிலே இல்லை பாருங்கள். என்று தெரிவித்துள்ளார்.