போதி தர்மரின் மரபணுவில் வந்தவர்தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் - காங். உறுப்பினர் செல்வபெருந்தகை பேச்சு
தமிழக சட்டப்பேரைவில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை ஓப்பன் டென்னிஸ் தொடரை மீண்டும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாட்டை 4 மண்டலங்களாக பிரித்து, 4 மண்டலங்களிலும் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், வட சென்னையில் குத்துச்சண்டை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது உள்ளிட்ட விளையாட்டுத் துறை தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது சட்டப்பேரவையில் முதலமைச்சரின் இந்த அறிவிப்புகளை பாராட்டி பேசிய காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வபெருந்தகை, முதலமைச்சர் கட்சியில் எப்படி ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறாரோ, தமிழகத்திற்கு எப்படி ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறாரோ உடல் வலிமை மற்றும் உள்ள வலிமையிலும் தமிழக மக்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறார் என பேசினார்.
அப்போது ராகுல் காந்தி கூறியதை நினைவுக்கூர்ந்த அவர், முதலமைச்சர் ஸ்டாலின் சனிக்கிழமைகள் தோறும் சைக்கிள் ஓட்டுவதை அறிந்ததும் தானும் ஸ்டாலினுடன் சைக்கிள் ஓட்ட வேண்டும் என ராகுல் காந்தி விருப்பம் தெரிவித்தார். முதலமைச்சரிடமும் இது குறித்து கோரிக்கை வைத்துள்ளார் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்திய ஒருமைப்பாட்டை பேனுவதற்கு எடுத்துக்காட்டாக இருப்பது விளையாட்டு, ஆகையால் விளையாட்டுத்துறை மிகவும் முக்கியமானது. அப்படி விளையாட்டை மேம்படுத்துவதில் அக்கறை காட்டும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதி தர்மரின் மரபணுவில் வந்தவர்தான் என கூறினார்.