தாய்மாமன் முறையில் ஏழைப்பெண்ணுக்கு சீர்செய்த எம்எல்ஏ
மதுரை அவனியாபுரத்தில் ஏழை பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணை பலரும் பாராட்டி வருகின்றனர். திருப்பரங்குன்றம் அவனியாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த தம்பதியினர் மலைச்சாமி- ஆனந்த ஜோதி. இவர்களுக்கு அபிராமி, மணிகண்டன் என்று இரண்டு குழந்தைகள் உண்டு, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மலைச்சாமி இறந்துவிட்டார்.
இதனால் வீட்டு வேலை செய்து ஆனந்த ஜோதி குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார், எனினும் போதிய வருமானம் இன்றி தவித்து வந்துள்ளனர். அன்றாட செலவுக்கே கஷ்டப்பட்டு வந்ததால், திருமண வயதை எட்டியும் தன் மகள் அபிராமிக்கு திருமணம் செய்துவைக்க முடியவில்லையெ என ஆனந்த ஜோதி வருத்தப்பட்டுள்ளார்.
இவர்களின் நிலையறிந்த திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் அபிராமிக்கு சொந்த செலவில் திருமணத்தை நடத்த முன்வந்தார். இதன்படி நேற்று அபிராமிக்கு திருமணம் நடந்து முடிந்தது, அத்துடன் தாய்மாமன் முறையில் சீர் வரிசையும் செய்தார் சரவணன் எம்எல்ஏ.