பெண்களின் திருமண வயதை உயர்த்த வேண்டும் - சட்டமன்றத்தில் தவெக எம்எல்ஏ கோரிக்கை
tvk mla request to increase women marriage age to 21: பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என தவெக எம்எல்ஏ சத்யா கோரிக்கை.விடுத்துள்ளார்.
பெண்களின் திருமண வயதை உயர்த்த கோரிக்கை
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாற்றுத் திறனாளிகள், மதுவிலக்கு, சமூகநலன் வேளாண்மைத்துறை மானிய கோரிக்கை இன்று நடைபெற்றது.
இதில் பேசிய தவெகவை சேர்ந்த கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சத்யா, இன்று இளமை திருமணம் என்பது பரவலாக காணப்படுகிறது. மன பக்குவமின்மை, குடும்ப வறுமை, சொந்தம் விட்டு போகக்கூடாது, சொத்துகள் வெளியே சென்று விடக்கூடாது போன்ற காரணங்களால் இந்த இளமைத் திருமணம் ஆங்காங்கே பரவலாக நடந்து வருகிறது.

18 வயது உடையவர்களில் கிட்டத்தட்ட 25% பேர்கள் இந்த இளமைத் திருமணத்தை மேற்கொள்கின்றனர். இந்த இளமைத் திருமணங்களில் பெண்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். உடலாலும், மனதாலும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
கணவன் மனைவிகளுக்கு இடையே பல்வேறு விதமான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீதிமன்றம் வரை வந்து பிரிந்து வாழும் நிலை இன்று அதிகம் ஏற்படுகின்றது.
இன்னும் கொடியது ஆங்காங்கே குழந்தை திருமணம் நடைபெறுகிறது. அது இன்னும் பல்வேறு பிரச்சனைகளை பெண் குழந்தைகளுக்கு ஏற்படுத்துகிறது.
16 வயதில் திருமணம், 17 வயதில் குழந்தை, 18 வயதில் ஒரு வயது குழந்தை, அந்த 18 வயது குழந்தை ஒரு வயது குழந்தையோடு விளையாடுகிறது.
ஒரு வயது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் உடல் உபாதைகளால் அழுகிறது என்று கூடத் தெரியாத அளவுக்கு பல்வேறு பிரச்சனைகள் உள்ளது.
ஆகவே, இது போன்ற பிரச்சனைகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பெண்ணின் திருமண வயது 18 என்கிற இந்த சட்டத்தை 20 அல்லது 21 வயதிற்கு கண்டிப்பாக உயர்த்தி தர வேண்டும்" என கூறியுள்ளார்.
இந்தியாவில் தற்போது பெண்களின் திருமண வயது 18 ஆகவும், ஆண்களின் திருமண வயது 21 ஆகவும் உள்ளது.