இ-பதிவு முறையில் குளறுபடி: தமிழக அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தல்
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இ-பதிவு முறையில் ஒரே மாதிரியான நடைமுறைகளை வழங்க முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா தொற்றின் காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல, மாவட்டத்திற்கு உள்ளே செல்ல இ-பதிவு முறை அமலில் உள்ளது.
ஆனால் இதில் பல குழப்பங்கள் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிலையில் நாள்தோறும் சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் வாகனங்களில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்படுவதால் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தினமும் கிராமம் கிராமமாக சென்று மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது மக்கள் வெளியில் நடமாடுவதை தடுக்க தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது இ-பதிவு முறையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக செய்திகள் வெளியாவதை அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு சமயத்தில் உரிய நடைமுறைகளுடன் கூடிய இ-பதிவு முறையை தமிழக அரசு கொண்டுவர வேண்டுமென ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.