தெருவில் டிராக்டர் ஓட்டிக்கொண்டே வந்த பாஜக எம்.எல்.ஏ. - ஆச்சரியத்தில் பொதுமக்கள்
திருநெல்வேலியில் வெள்ளநீர் பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்த பாஜக எம்எல்ஏவை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் மாநிலம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
அந்த வகையில் திருநெல்வேலி மாநகர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு இடங்களில் மழை ர் வடியாமல் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக நெல்லை டவுன் காட்சி மண்டபம், தொண்டர் சன்னதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அருகிலுள்ள கண்டியபேரி மற்றும் கிருஷ்ணபேரி ஆகிய குளங்களில் இருந்து வெளியேறிய நீர் ஊருக்குள் புகுந்துவிட்டது.
இதன்காரணமாக, ஏராளமான வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.டவுண் முழுவதுமே மழை நீர் பெருக்கடுத்து ஓடுகிறது. நெல்லை பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் டவுணில் ஏற்பட்டுள்ள மழைநீர் பாதிப்புகளை நேரில் பார்வையிட காரில் சென்றார்.
ஆனால் அங்குள்ள சில தெருக்களில் கார்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. உடனடியாக டிராக்டர் வண்டியை வரவழைத்த அவர் வண்டியில் ஏறி உட்கார்ந்துஓட்டிக் கொண்டு அந்த தெருக்களில் நுழைந்தார் . மேலும் மழைநீர் பாதிப்புகளை பார்வையிட்டபடியே ஆய்வு செய்து அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். டிராக்டர் ஓட்டிக் கொண்டு எம்எல்ஏ வருவதை பார்த்தது தொகுதி மக்கள் ஆச்சரியப்பட்டு போனார்கள்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் பாஜக வெற்றி பெற்ற தொகுதி இது என்பதால் டவுண் பகுதி புறக்கணிக்கப்படுகிறது... இந்த 2 நாட்களாக மழை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறேன்... தொகுதியில் மழை பெய்தால் சந்திக்க உள்ள பிரச்சனைகள் குறித்து முன்கூட்டியே கலெக்டரிடமும், மாநகராட்சி ஆணையரிடம் 10 முறைக்கு மேல் மனு அளித்தேன். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.