சட்டசபையில் ஆபாசப்படம் பார்த்த பாஜக எம்.எல்.ஏ - கொந்தளித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சஸ்பெண்ட் !
சட்ட சபையில் ஆபாசப் படம் பார்த்த பாஜக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவு.
ஆபாசப் படம் பார்த்த எம்.எல்.ஏ
மாணிக் சாகா தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வரும் திரிபுரா மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. எனவே அதன் கடைசி நாளில் பாஜக எம்.எல்.ஏ. ஜடாப் லால் நாத் என்பவர் தனது செல்போனில் ஆபாசப் படம் பார்த்துக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவ அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலிறுத்தி வந்தது. ஆனால் யாரேனும் புகார் கொடுத்தால்தான் அவர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் விஸ்வபந்து சென் தெரிவித்தார்.
5 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்
இந்நிலையில் திரிபுரா சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. அப்போது செல்போனில் ஆபாசப்படம் பார்த்த பாஜக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த சபாநாயகர், பல்வேறு முக்கிய பிரச்சனைகள் இருப்பதால் அவர்களது இருக்கையில் சென்று அமரும்படி கூறினார். இதனையடுத்து எதிர்க் கட்சி எம்.எல். ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டனர். எனவே அமளியில் ஈடுபட்ட 5 எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் விஸ்வபந்து சென் .