ஜெய்பீம் பார்த்துட்டு 2,3 நாட்கள் தூங்கல - முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்!
ஜெய்பீம் படம் பார்த்த பிறகு என்னால் 2,3 நாட்களுக்கு தூங்க முடியவில்லை. என் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் என தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை அடையாறில் உள்ள திருவாடுதுறை ராஜரத்தினம் கலை அரங்கத்தில், முத்தமிழ் பேரவையின் 41வது ஆண்டு இசை விழாவில், இயல், இசை, நாடக கலைஞர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்கினார்.

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சராக பதவியேற்ற பிறகு பங்கு கொள்ளும் முதல் இசை விழா. முத்தமிழ் பேரவையும், விழா நடக்கும் ராஜரத்தினம் அரங்கமும் கலைஞரால் உருவாக்கப்பட்டது.
ஜெய்பீம்
என்னை தட்டி கொடுத்து வளர்த்த என் அண்ணன் அமிர்தம். அவருக்காக இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். விருதாளர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். எனக்கு திரையிசை பாடல்கள் தான் பிடிக்கும்.

ஆனால் தலைவர் கலைஞர் இயல், இசை, நாடகம் என முத்தமிழ் கலைகளிலும் கோலோச்சியவர். தமிழ் இசை இன்று ராப், தெங்மாங்கு, கிராமிய இசை என பல்வேறு பரிணாமங்களை அடைந்து இருக்கிறது.
ஆனால் வடிவம் எதுவாகியினும், அது தமிழ் இசையாக இருக்க வேண்டும். சமஸ்கிருதத்தில் பாடல்கள் பாடப்பட்ட காலத்தில், தமிழில் இசை கச்சேரி நடத்த வேண்டும் என்று பெரியார் தலைமையில் போராட்டம் நடத்தி தமிழ் இசைக்கான உரிமையை பெற்று தத்தது திராவிட இயக்கம்.
கலை எப்போது மக்களுக்கானதாக இருக்க வேண்டும். மக்களின் பக்கம் நின்று கலைஞர்களும் தமிழ் தொண்டாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எல்லாரின் தோளோடு தோள் நின்று, உறுதுணையாக இருக்க நான் இருப்பேன்.
என்னுடைய வாழ்வில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தியது ஜெய்பீம் படம். அந்த படத்திற்கு அதன் இயக்குநருக்கு விருது வழங்கியது மிக்க மகிழ்ச்சி. சிறைச்சாலை சித்ரவதையை அனுபவித்த என்னால், அந்த படம் பார்த்த பிறகு என்னால் 2,3 நாட்களுக்கு தூங்க முடியவில்லை.
என் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் ஜெய்பீம். அந்த படம் பலரது மனசாட்சியை உலுக்கியது என தெரிவித்தார்