வேர்களைத் தேடி திட்டம் என் மனதுக்கு நெருக்கமானது - முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி

Tamils M K Stalin Tamil nadu Tamil diaspora
By Karthikraja Jan 12, 2025 06:33 AM GMT
Report

வேர்களைத் தேடி திட்டம் என் அரசியல் வாழ்வின் மைல்கல் திட்டம் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

அயலகத் தமிழர் தினம்

சென்னை நந்தம்பாக்கத்தில் ‘அயலகத் தமிழர் தினம்’ மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். 

diaspora tamils day

இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நான் முதலமைச்சரான பிறகு, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்பெயின், சிங்கப்பூர் என எந்த நாட்டிக்கரு சென்றாலும் தாயகத்தில் இருக்க கூடிய உணர்வை அயலக தமிழர்கள் ஏற்படுத்தினாங்க.

முதல்வர் ஸ்டாலின்

அதுவும் அமெரிக்கா சென்றபோது எனக்கு கொடுத்த வரவேற்பையும், பாச உணர்வையும் இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. நாடு, நில எல்லைகள், கடல் என புறப்பொருட்கள் நம்மை பிரித்தாளும், தமிழ் மொழி, தமிழ் எண்ணம் என உள்ளதால் ஒன்றாக இருக்கிறோம். 

mk stalin

தமிழ்தான் நம்மை இணைக்கும் தொப்புள்கொடி. அந்த உணர்வோடு தாய் மண்ணான தமிழ்நாட்டுக்கு வந்துள்ள உங்களை, உங்களில் ஒருவனாக வரவேற்கிறேன். தமிழ்நாட்டின் முதலமைச்சராக அயலக தமிழர் நாள் நல்வாழ்த்துக்களை உலக தமிழர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.

வேர்களைத் தேடி திட்டம்

இங்கு குடியிருக்கும் பலரின் முன்னோர்கள் நூறு, இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் பல்வேறு காரணங்களுக்காக இந்த பூமி பந்தில் உள்ள வேறு சில நாடுகளுக்கு சென்றார்கள். தங்களது ஓய்வறியா உழைப்பு, தியாகம், கண்ணீர் சிந்தி அந்த நாடுகளை வளர்த்தார்கள். அவர்களால்தான் பாலைகள் சோலைகள் ஆனது. கட்டாந்தரை சாலைகளானது. அலைகடல்கள் துறைமுகங்கள் ஆனது. அந்த நாடுகளும் வளர்ச்சியடைந்தது.

வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் நீங்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை. தமிழ்நாடும் உங்களை மறக்காது. வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழக அரசின் செயல்பாடுகள் அயலக தமிழர்களுக்கு தெரிந்திருக்கும். என்னுடைய ஸ்டைல் சொல் அல்ல, செயல்.

உலகில் எந்த பகுதியில் தமிழர்களுக்கு பிரச்னைகள் என்றாலும் அவர்களை தேடிச் சென்று உதவி செய்யும் வேர்களைத் தேடி திட்டம் என் அரசியல் வாழ்வின் மைல்கல் திட்டம். என் மனதுக்கு நெருக்கமான திட்டம். வேர்களைத் தேடி திட்டத்தின் மூலம் 157 இளைஞர்கள் தாயகம் திரும்பி இருக்கின்றனர்.

100 ஆசிரியர்கள்

உலகை உலுக்கும் உக்ரைன் போராக இருந்தாலும் சரி, மனதை உருக்கும் இஸ்ரேல் போராக இருந்தாலும் சரி, தமிழர்களை தேடிச் சென்று ஆதரவுக் கரம் நீட்டி வருகிறோம். உலகம் முழுவதும் இன்னலுக்கு ஆளாகும் அயலக தமிழர்களை அயலக தமிழர் நலத்துறை காத்து வருகிறது. அல்லல்படுவோரின் கண்ணீரை துடைத்து இன்னலுக்கு ஆளாவோரின் புன்னகையை மீட்டுள்ளோம்.

தமிழ் மொழியையும், பாரம்பரிய கலைகளையும் அயல்நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு பயிற்சி அளிக்க 100 ஆசிரியர்கள் மற்றும் தமிழ் கலைஞர்கள் அயல்நாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள். இதற்கான செலவை அரசு ஏற்கும். இந்த திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்" என பேசினார்.