மதுரை மாநகராட்சி மேயர் மாற்றப்படுகிறாரா? - அதிருப்தியில் முதலமைச்சர்

M K Stalin Madurai
By Petchi Avudaiappan May 13, 2022 06:36 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

மதுரை மாநகராட்சி மேயர் மாற்றப்படவுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில் மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி தேர்வு செய்யப்பட்டார். மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றவுடன் மேயர், துணை மேயர் யார் என்ற கேள்வி எழுந்தது. 

அதற்கு காரணம் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி என இரண்டு அமைச்சர்களை கொண்ட மாவட்டமாக மதுரை இருப்பதால் யாருடைய செல்வாக்கில் இப்பதவி கிடைக்க போகிறது என எதிர்பார்ப்பு நிலவியது. 

கடைசியில் பழனிவேல் தியாகராஜன் தேர்வு செய்த 57வது வார்டு கவுன்சிலர் இந்தியாணியை கட்சித் தலைமை மேயராக தேர்வு செய்தது. அவர் பதவியேற்ற சில நாட்களில் மதுரை மாவட்ட வளர்ச்சி பணிகளுக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள், மாவட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் விமானநிலையத்தில் வரவேற்ற போது மேயர் இந்திராணி மட்டும் அங்கு வரவில்லை.

இது பெரும் சர்ச்சையானதால் முதலமைச்சரை சென்னை சென்று சந்தித்து இந்திராணி வாழ்த்து பெற்றார். மேலும் அரசியல் அனுபவம் இல்லாத மேயர் இந்திராணிக்கு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் மேயர் பணி குறித்து பாடம் எடுத்ததாக சொல்லப்படுகிறது. 

இப்படி மேயர் இந்திராணி மீது பல குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் நேற்று முன்தினம் நடந்த மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்களுக்கு முறையாக இருக்கை ஒதுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக புகார் அளிக்கச் சென்ற அதிமுக கவுன்சிலர்களை செய்தியாளர்கள் சிலர் பின்தொடர்ந்து செய்தி சேகரிக்கச் சென்றனர்.

மேயர் அறையின் முன்பு இருந்த திமுகவினர் சிலர் பத்திரிகையாளர்களை தாக்கியதோடு கேமராக்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில் அப்போது அங்கு வந்த இந்திராணியின் கணவர் பொன்வசந்த் பத்திரிகையாளர்களை மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.  

இந்நிலையில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தேசிய அளவில் வைரலானதைத் தொடர்ந்து  மாமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட மேயர் இந்திராணி வருத்தம் தெரிவித்தார். இந்த விவகாரம் திமுகவுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால்  இந்திராணி மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக மேயரை மாற்றலாமா என்று கட்சித் தலைமை ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.