உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் பயன் பெற்றவர்களிடம் உரையாடிய மு.க.ஸ்டாலின்...
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" என்ற துறையின் மூலம் பயன் பெற்ற பொதுமக்களிடம் தொலைபேசியில் கலந்துரையாடினார்.
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவின் தேர்தல் பரப்புரையில் "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற நிகழ்வின் மூலம் பொதுமக்களின் குறைகளை மனுவாக பெறப்பட்டு 100 நாட்களில் தீர்வு காணப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அதன்படி தமிழகத்தின் முதலமைச்சராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றதும் "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்தத் துறையின் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு மின் ஆளுமை ஆணையர் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் அலுவலகத்திற்கு நேரில் சென்று அங்கு நடைபெறும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த பொது மக்களிடம் அவர் தொலைபேசி வாயிலாக உரையாடினார். மேலும் அவர்கள் அளித்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அப்போது மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.