கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு

CM MK Stalin Injection Camp
By Thahir Oct 10, 2021 01:33 PM GMT
Report

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு மக்கள் அனைவரையும் கொரோனா தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் அனைவருக்கும் தடுப்பூசி விரைந்து செலுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு | Mkstalin Cm Tamilnadu Covid Injection Camp

தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டில் இதுவரை, 12-09-21, 19-09-21, 26-09-21 மற்றும் 03-10-21 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நான்கு மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் மொத்தம் 87,80,262 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இன்று (10.10.2021) தமிழ்நாட்டில் 5-வது மாபெரும் தடுப்பூசி முகாம்கள் மொத்தம் 32,017 மையங்களில் மெகா கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மட்டும் 1600 கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (10.10.2021) கிண்டி, மடுவன்கரை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சின்னமலை, புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப் பள்ளி ஆகிய கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்து, தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்த பொதுமக்களிடமும், பணியாளர்களிடமும் உரையாடினார்.

மாவட்ட வாரியாக முதலாவது மற்றும் இரண்டாவது கொரோனா தடுப்பூசி தவணை பெற்றவர்கள் பற்றிய விவரங்களை கேட்டறிந்தார்.

அப்போது தமிழ்நாட்டில் நேற்று வரை (09-10-2021) 3,74,20,314 பயனாளிகளுக்கு முதலாவது தவணையாக 65 சதவீதமும் மற்றும் 1,29,38,551 பயனாளிகளுக்கு இரண்டாவது தவணையாக 22 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளதாக முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "தமிழ்நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணையும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதால்,

அவரவர் இருப்பிடத்தின் அருகிலேயே முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாலும், இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

முதலமைச்சர், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிர இயக்கமாக நடத்த அறிவுறுத்தினார். மாவட்ட ஆட்சியர்கள் சிறப்பு கவனம் செலுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்களின் இலக்கை முழுமையாக அடைய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.ஜெ.இராதகிருஷ்ணன், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.