இயற்கை வளங்களை பாதுகாப்பதில் தமிழக அரசு விழிப்பாக இருக்க வேண்டும் - உயர்நீதிமன்றம் அறிவுரை!
சட்ட விரோத கிரனைட் கொள்ளைக்கு முடிவு கட்டவேண்டும்,மேலும் இயற்கை வளங்களை பாதுகாப்பதில் தமிழக அரசு விழிப்பாக இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் அனுமதி இல்லாமல் செயல்படும் குவாரிகளிடமிருந்து கிரானைட் வளங்களை பாதுகாக்க கோரி ஜி.சரவணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் தனிப்பட்ட விரோதம் காரணமாக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தனிப்பட்ட விரோதம் இருந்தாலும் ஆக்கிரமிக்கப்படுவதும் கொள்ளையடிக்கப்படுவதும் அரசு நிலமாக இருப்பதால் அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தினர். அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக நடைபெறும் கிரானைட் கொள்ளை எங்கு நடைபெற்றாலும் அதற்கு முடிவுகட்ட வேண்டும் எனவும் கிரானைட் வளங்களை பாதுக்காப்பதில் அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர்.
மனுதாரர் குறிப்பிடும் இடத்தில் நேரில் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை 3 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.