"சகோதரி அஸ்வினிக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல, மரியாதை" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சுயமரியாதையும் சமூக நீதியையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி நரிக்குறவர் பகுதிக்கு வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி பாசி மாலை அணிவித்ததுடன், எங்கள் மக்களுக்கு அடையாள அட்டை ,வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை செய்து ஆதரவளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிக்க நன்றி என்று கண்ணீர் மல்க கூறினார்.
தீபாவளி திருநாளில் நரிக்குறவர் இருளர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து மக்கள் பணியாற்றிய பின்பு , நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில் இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், சமூகத்தின் விளிம்புநிலையில் இருக்கும் ஒருவரையும் விடாது சுயமரியாதையும் சமூகநீதியையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி! சகோதரி அசுவினி அவர்களுக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல; மரியாதை.
அதை மீட்டுத்தர ஆட்சிப் பொறுப்பு என்பது பெருவாய்ப்பு. இதேபோல் இரண்டுவார காலத்துக்கு தமிழ்நாடு முழுவதும் இம்மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட உத்தரவிட்டுள்ளேன்.
இவற்றையெல்லாம் செய்யும்போது, திராவிட இயக்கம் கடந்து வந்த நெருப்பாறு என் நினைவுகளில் நிழலாடுகிறது! 'பெரியார் - அண்ணா - கலைஞர்' ஆகியோரை நெஞ்சிலேந்தி அவர்களுக்கான உதவிகளை வழங்கினேன். நடமாடும் கோயில் திருப்பணி தொடரும்! என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த 24ஆம் தேதி மாமல்லபுரம் ஸ்ரீ தலசயனப் பெருமாள் கோயிலில் அன்னதானம் சாப்பிட்ட சென்ற நரிக்குறவ பெண் அஸ்வினி விரட்டி அடிக்கப்பட்ட நிலையில் இந்த வீடியோவை கண்ட அமைச்சர் சேகர் பாபு, நரிக்குறவ பெண் அஸ்வினுடன் ஒன்றாக அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டார்.
அத்துடன் அங்குள்ள இருளர் மற்றும் நரிக்குறவர்கள் 81 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா, மின்சார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டும் என்று அஸ்வினி கோரிக்கை வைத்த நிலையில்,
முதலமைச்சரின் உத்தரவின் பேரில் ஒரு வாரத்தில் பூஞ்சேரியில் சாலை அமைத்தல், மின்கம்பம் அமைத்தல், தெருக்கு தெரு குடிநீர் தொட்டி, மின் விளக்குகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமூகத்தின் விளிம்புநிலையில் இருக்கும் ஒருவரையும் விடாது சுயமரியாதையும் சமூகநீதியையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி!
— M.K.Stalin (@mkstalin) November 4, 2021
சகோதரி அசுவினி அவர்களுக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல; மரியாதை. அதை மீட்டுத்தர ஆட்சிப் பொறுப்பு என்பது பெருவாய்ப்பு. pic.twitter.com/JdDML6a9S3