தமிழக வேளாண் பட்ஜெட் தொடர்பாக முதலமைச்சர் இன்று ஆலோசனை!
வேளாண் பட்ஜெட் தொடர்பாக முக்கிய அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின் ஆளுநர் உரையிலும் இந்த அறிவிப்பு உறுதிப்படுத்தப்பட்டது.
தமிழகத்திற்கான பொது பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், வேளாண் துறைக்கும் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு தயாராகும் வகையில் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் கடந்த 4-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வேளாண், உணவு, கால்நடை ஆகிய துறைகளை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்ற அந்த கூட்டத்தில் விளைப்பொருட்காளுக்கான சந்தை வசதியை முறைப்படுத்துதல், உழவர் சந்தையை புதுப்பித்தல், லாபகரமான விலைக்கு உத்தரவாதம், மகசூல் பெருக்கத்திற்கான நவீன தொழில்நுட்ப வசதி, பாரம்பரிய விவசாய முறைகளை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில், வேளாண் பட்ஜெட் தொடர்பாக முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் வேளாண் பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக முக்கிய அதிகாரிகளுடன் முதலமைச்சர் கலந்துரையாடுகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் வேளாண் பட்ஜெட் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.