ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக வாள்வீச்சு வீராங்கனைக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

MKStalin Olympic Bhavani Devi
By Thahir Jun 20, 2021 11:15 AM GMT
Report

ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


"தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி, தமிழகத்தின் பாரம்பரிய கலையான வாள்வீச்சில் பயிற்சி பெற்று உலக அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்களை வென்றுள்ளார். அவரின் ஊக்கத்தினையும், விடாமுயற்சியினையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தில் விளையாட்டு அலுவலர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பவானி தேவி தற்போது ஜப்பான் நாட்டின், டோக்கியோ மாநகரில் நடைபெற உள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். அவர் தேவையான பயிற்சிகள் பெற அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது.


அவர் தற்போது இப்போட்டிக்காக இத்தாலி நாட்டில் பயிற்சி பெற்று வருகிறார். மேலும், சில பயிற்சிகள் பெற பவானி தேவி தமிழக அரசிடம் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி கோரியிருந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின், பவானி தேவி-யின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, அவரை ஊக்குவிக்கும் வகையில், இன்று சென்னை, அண்ணா சாலை, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது தாயாரிடம் வழங்கினார்".