செயலிழந்த அரசு.. மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - கொந்தளித்த எல். முருகன்!
மக்களின் உயிர் மீது முதல்வருக்கு அக்கறை இல்லை என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
எல். முருகன்
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். அவருக்கு பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன் "திமுக அரசின் நிர்வாக சீர்கேடு காரணமாக இன்றைக்கு கள்ளக்குறிச்சியில் 50க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை பலி கொடுத்திருக்கிறது.
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் நடந்து 2 நாட்களை கடந்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னும் மக்களை வந்து பார்க்கவில்லை. மக்களின் உயிர் மீது முதல்வருக்கு அக்கறை இல்லை.
செயலிழந்த அரசு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளச்சாராய விவகாரத்தில் நேரடியாக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியாத செயலிழந்த அரசாக,
இந்த திமுக அரசாங்கம் இருந்து கொண்டிருக்கிறது. இக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக அரசு மக்களை போதைப் பொருட்களால் அழித்துக் கொண்டிருக்கிறது" என்று குற்றம்சாட்டியுள்ளார்.