முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு - பெயர் மாற்றப்பட்ட திட்டம்
சமபந்தி போஜனம் என்பது பெயர் மாற்றம் செய்யப்பட்டு இனிமேல் சமத்துவ விருந்து என்று அழைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் மீது அதிக அக்கறையும், அவர்களின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடும் கொண்ட தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் காட்டிய சமூகநீதிப் பாதையில் வீறு நடைபோடும் நமது அரசு இந்த மக்களின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு நலத் திட்டங்களை முனைப்போடு நிறைவேற்றி வருகிறது என தெரிவித்தார்.
மேலும் வன்கொடுமையைத் தடுக்க நாம் எத்தனையோ முயற்சிகள் எடுத்து வருகிறோம். ஆனாலும் ஆங்காங்கே சில சம்பவங்கள் தலைதூக்கவே செய்கிறது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோர்களுக்கு வழக்கின் தன்மைக்கேற்றவாறு ரூ.85,000லிருந்து ரூ.8.25 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்பட்டு வந்தது. இந்தத் தொகை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இனி, பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறைந்தபட்சமாக ஒரு இலட்சம் ரூபாயும், அதிகபட்சமாக ரூ.12 இலட்சமும் மாநில அரசு நிதி மூலம் உயர்த்தி வழங்கப்படும் என அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் சில கிராமங்களில் சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் பயன்பாட்டில் உள்ளது. இத்தகைய சிற்றூர்களுக்கு ஊக்கத்தொகையாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணத்தின் மூலமாக அந்த ஊரின் வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. 10 மாவட்டங்களில் தலா மூன்று ஊர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒரு மாவட்டத்திற்கு 30 லட்சம் என்ற வீதத்தில், 3 கோடி ரூபாய் இத்திட்டத்தின்கீழ் விடுவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அதேசமயம் நேற்று காலையில் என்னை சந்தித்த எம்.எல்.ஏ. சிந்தனை செல்வன், ஆகஸ்ட் 15 விடுதலை நாள் உள்ளிட்ட முக்கிய நாட்களில் இதுவரை நடைபெற்று வந்த சமபந்தி போஜனம் என்பதை பெயர் மாற்ற வேண்டுமென்று ஒரு வேண்டுகோளை முன் வைத்தார். அதனை ஏற்று இனிமேல் சமத்துவ விருந்து என்று பெயர் மாற்றம் செய்யப்படும் என்பதை இந்த கூட்டத்தின் மூலமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.